தமிழ்ச் சினிமாவில் நயன்தாராவுக்கு இணையாக இதுவரை எந்த நடிகையும் சம்பளம் வாங்கியதில்லை.
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா தொடர்ந்து நடிப்பாரா? இப்போது கிடைக்கும் வரவேற்பு நீடிக்குமா? என்பது தெரியாது. எனினும் தமிழ்ச் சினிமாவுக்கு அடுத்த நயன்தாரா கிடைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
நயனின் இடத்தைப் பிடிப்பார் என்று கோடம்பாக்கத்துப் புள்ளிகள் சுட்டிக்காட்டும் இளம்நாயகி வேறு யாருமல்ல, ராஷ்மிகா மந்தனாதான்.
தமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய கதாநாயகி நயன்தாரா. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் இவருக்கு வரவேற்பு இருந்தது. இதனால், வேறு வழியின்றி தெலுங்கு தயாரிப்பாளர்களும் நயன்தாரா கேட்ட சம்பளத்தை அள்ளிக் கொடுத்தனர்.
இடையில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்குப் பிறகு 3 ஆண்டுகள் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை நயன்தாரா. அத்தோடு இவர் கதை முடிந்தது என்று பேசப்பட்டது.
ஆனால், ‘ராஜா ராணி’ திரைப்படம் நயனுக்கு இரண்டாவது சுற்றைத் தந்தது. இதையடுத்து அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் வசூல் ரீதியில் வெற்றிபெற மளமளவென முன்னேறி, தமிழ்ச் சினிமாவில் ‘நம்பர் ஒன்’ நடிகையாக உருவெடுத்தார்.
தற்போது ராஷ்மிகா மந்தனாவும் நயன்தாரா போலவே முன்னேறி வருவதாகத் திரையுலகப் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தில் ராஷ்மிகாதான் நாயகி. இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தெலுங்கில் ராஷ்மிகா அடுத்தடுத்து கொடுக்கும் வெற்றிப் படங்கள் காரணமாக கோடம்பாக்கத்துத் தயாரிப்பாளர்களும் இவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அவசரப்படுகிறார்கள்.
விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்த போதிலும் கால்ஷீட் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் ராஷ்மிகா. விஜய்யுடன் நடிக்க மறுத்தார் என்ற தகவல் வெளியான பிறகு இவரது மவுசு ஏகத்துக்கும் அதிகரித்து விட்டது.
‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர முடியாவிட்டாலும் அவரது அடுத்த படத்தில் ராஷ்மிகாதான் நாயகி என்பது எப்போதோ முடிவாகி விட்டதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
நயன்தாராகூட கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்த பிறகே 5 கோடி சம்பளம் பெறுகிறார்.
ஆனால், ராஷ்மிகாவோ இப்போதே 4 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறாராம். அப்படியானால் விஜய் படத்தில் நடித்த பிறகு அவர் நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் பெறுவார் என்றும், அடுத்த ஓராண்டுக்குள் நயனை முந்திவிடுவார் என்றும் திரை விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
இதனால் கோடம்பாக்கத்தில் அடுத்த நயன்தாரா என்றே ராஷ்மிகாவைக் குறிப்பிடுகின்றனர்.
“ராஷ்மிகாவின் பலமே அவரது துருதுரு இயல்பும் பேச்சும்தான். அதனால் இளையர்களைச் சுலபமாக ஈர்த்து விடுகிறார். முன்னணி கதாநாயகர்களுக்கு இளையர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. எனவே, ராஷ்மிகாவுடன் இணைந்து நடிக்கும்போது அவர்கள் எதிர்பார்க்கும் இந்த ஆதரவு மேலும் அதிகரிக்கிறது.
“விஜய் உள்ளிட்ட முன்னணி நாயகர்கள் இந்த ஒரு விஷயத்துக்காகவே ராஷ்மிகா மீது கவனம் செலுத்தத் துவங்கி உள்ளனர். அதனால் அவரது கால்ஷீட் விவகாரங்களை நன்கு கவனித்து அடுத்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்யுமாறு விஜய் கூறினாராம். விஜய் போன்ற பெரிய நடிகரே இந்தளவுக்கு உற்றுக் கவனிக்கும் வகையில் ராஷ்மிகா வளர்ந்திருக்கிறார்,” என்று சுட்டிக் காட்டுகிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.