சந்தையில் அதிகரித்துவரும் தேங்காயின் விலையை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை மீளாய்வு செய்வதற்காக கலந்துரையாடலின் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி, சிலாபம் பெருந்தோட்டக் கம்பனி, தெங்கு செய்கை சபை என்பவற்றுடன் இணைந்து சதொஸ உள்ளிட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் சலுகை விலையில் நுகர்வோருக்கு தேங்காயை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
டின் மீன், கோழி இறைச்சி, முட்டை என்பவற்றின் விலை தொடர்பில் அங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்நாட்டு பால்மா உற்பத்திக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கி போட்டித் தன்மையுடன் நுகர்வோருக்கு பால்மாவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
உழுந்து மற்றும் மஞ்சளுக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரையறையை தற்காலிகமாக நீக்குமாறும் பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார். மரக்கறி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக பொருளாதார மத்திய நிலையங்களை பயன்படுத்தி, சதொஸ நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் ஒரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நுகர்வோரை பாதிக்கும் வகையில், விலையை அதிகரிக்கும் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இடைத்தரகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.