அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கு அமைவாக தற்பொழுது திட்டமிட்ட வகையில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் சிலர் திட்டமிட்டு செயற்படுவதாக தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாளர்களின் அறுவடைகளை அதாவது மரக்கறி போன்றவற்றை கொழும்பு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு எடுத்துச்செல்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (05) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது பற்றி வாழ்க்கைச் செலவினக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தக் குழு கூடியதாகவும் அவர் தெரிவித்தார்.
மரக்கறி, தேங்காய் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
இடைத்தரகர்களின் செயற்பாடுகளினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்திருக்கின்றன.
இடைத்தரகர்களின் அழுத்தங்கள் தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
வங்கி, நிதி நிறுவனங்கள், காப்புறுதி போன்ற துறைகளின் தேவைகள் பற்றிய புதிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நவீன தொழில்நுட்ப நிதிச் சேவையும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.
இலங்கையின் தேசிய மரபுரிமைகளை பாதுகாத்து அவற்றை பிரபல்யப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண இதன் போது தெரிவித்தார்.