மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தளபதி விஜய்யுடன் அவர் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. மேலும் அவர் நடித்து முடித்த ’மாமனிதன்’ என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மேலும் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ’கடைசி விவசாயி’ என்ற படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் இன்னொரு படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோஹ்நாத் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வந்த ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி ஜோடியாக மேகாஆகாஷ் நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர்கள் மோகன் ராஜா மற்றும் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.