இந்த ஆண்டு தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தனுஷ் பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அவர், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க உள்ளார்’ இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கவிருப்பதாகவும், வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள எழுத்தாளர்களான சர்ஃபு மற்றும் சுகாஸ் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வர்தன்’ மற்றும் ’வைரஸ்’ ஆகிய படங்களில் திரைக்கதை வசன கர்த்தாவாக பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் நரேனுடன் இணைந்து சர்ஃபு மற்றும் சுகாஸ் இந்த படத்திற்கு திரைக்கதை அமைப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகர் பிரசன்னா நடிக்கவிருக்கிறார் என்பதும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.