Home இலங்கைச் செய்திகள் கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்

by Thushyanthy Nirooshan

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா நாளை ஆரம்பமாகிறது.

இன்று (06) மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாவதுடன் திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும்.

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திரு விழாவிற்கான சகல ஒழுங்குகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவிச் செயலாளர் திருமதி.கமலராசன் கிரிசாந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார பிரிவு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. திருவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 3,000 பக்தர்கள் வரவுள்ளனர்.

இலங்கையில் இருந்து 7,000 பக்தர்கள் செல்லவுள்ளனர். இவர்களுக்கான போக்குவரத்து, தங்குமிடம், குடிநீர், உணவு, விசேட சுகாதார ஏற்பாடுகள் உள்ளிட்ட வசதிகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

பக்தர்களின் வசதி கருதி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடம் மற்றும் தனியார் பேருந்து தரிப்பிடங்களில் இருந்து நாளை காலை 5.00 மணி தொடக்கம் பகல் 11.00 மணி வரையில் குறிகட்டுவானுக்கான விசேட பஸ் சேவை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

குறிகட்டுவானில் இருந்து கச்சதீவிற்கான படகுச் சேவை காலை ஆறு மணி தொடக்கம் பகல் 11 மணி வரையில் இடம்பெறும். இதற்காக 17 படகுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவில் இருந்து கச்சதீவிற்கான போக்குவரத்தில் மூன்று படகுகள் சேவையில் ஈடுபடும். கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவில் பக்தர்கள் எதுவித அச்சமும் இன்றி கலந்து கொள்வதற்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருத்தலத்திற்குச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் யாழ் மாவட்ட உதவிச் செயலாளர் திருமதி கமலராசன் கிரிசாந்தி கேட்டுள்ளார்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment