Home இலங்கைச் செய்திகள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதியின் அதிரடி பதில்கள்!

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதியின் அதிரடி பதில்கள்!

by Thushyanthy Nirooshan

தான் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

அவ்வேலைத்திட்டங்கள் நாட்டின் எதிர்காலத்திற்காகவே முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தேர்தல் காலத்தில் தனது பிரதான எதிர்தரப்பு வேட்பாளரின் பெயரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் குறிப்பிடவில்லை எனவும் எதிரான கருத்துக்களை விமர்சிக்கவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டார்.

அது சிலநேரங்களில் கின்னஸ் சாதனையாகவும் அமைந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். தனக்கு தனிநபருக்குப் பதிலாக கொள்கையே முக்கியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், செய்தி முகாமையாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுடன் நேற்று (05) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் பல்வேறு விடயங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களிடம் கேள்வி எழுப்பினர். ஜனாதிபதி அவர்கள் அவற்றுக்கு இலகுவான, நேரடியான மற்றும் தெளிவான பதில்களை அளித்தார்.

நவீன தொழிநுட்பம் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகும். துரித பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்காக விசேடமாக தொடர்பாடல் தொழிநுட்பத்துடன் நவீன தொழிநுட்ப முறைமைகளை பொருளாதாரத்திற்கு அறிமுகம் செய்யும் நடவடிக்கைக்கு முக்கியத்துவமளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அபிவிருத்தி செயற்பாட்டில் உந்துசக்தியாக தொழிநுட்பம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். பொருளாதாரத்தின் அனைத்து துறைகளுக்கும் அவசியமான தொழிநுட்பத்தை அறிமுகம் செய்வதே தனது நோக்கமாகுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

“தொடர்பாடல் தொழிநுட்பத் துறையின் தற்கால பொருளாதார பெறுமதி டொலர் பில்லியன்களாகும். அது இன்னும் இரண்டு, மூன்று வருடங்களுள் மூன்று பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியும். உருவாக்க முடியுமான தொழில் வாய்ப்புக்கள் கிட்டத்தட்ட மூன்று இலட்சமாகும். நாம் செய்ய வேண்டியது தேவையான தொழிலாளர்களை பயிற்றுவித்தலாகும்.” என ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் உங்களது தரப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஏன் கேட்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தனக்கு அதிகாரத்தைப் பெற்றுத்தந்த மக்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுப்பதாக கூறினார். அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமெனில் ஜனாதிபதிக்கு தடைகள் இன்றி செயற்பட வாய்ப்பு இருக்க வேண்டும்.

19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் அவ்வாய்ப்பு அற்றுப்போயுள்ளது. மக்களின் வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் மூலமே தடை ஏற்படுத்தியிருப்பின் அவ்வாறான அரசியலமைப்பின் அர்த்தம் என்ன? என்ற கேள்வி எழுப்பிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுவது இத்தடையை நீக்குவதற்காகுமென சுட்டிக்காட்டினார்.

சுயாதீன ஆணைக்குழு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, “சுயாதீன” ஆணைக்குழு சுயாதீனமாக இயங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். 19 வது சீர்திருத்தம் அறிமுகம் செய்துள்ள சுயாதீன ஆணைக்குழு அவ்வாறு செயற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரினால் வேலையற்ற பட்டதாரிகளின் தொழிற் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதற்கான தீர்வு என்ன? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் எனது ஜனாதிபதி தேர்தலின் உறுதிமொழியாகும். அங்கு அரசியல் இல்லை. தகுதியுள்ள அனைவருக்கும் தொழில் வழங்க தெரிவு செய்யப்பட்டது. தற்போது அவர்களை பயிற்றுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தொழிலில் ஈடுபட பயிற்சி அவசியம். அதனால் அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடுவேன்” என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஜெனிவா ஆலோசனை என்னும் இலங்கை தொடர்பாக மனித உரிமை கவுன்சிலின் யோசனைக்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகியதன் மூலம் உருவாகக்கூடிய பிரதிபலன்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

“ஜெனிவா யோசனை நாட்டின் இறைமைக்கு மற்றும் அபிமானத்திற்கு சவாலாகும். தமது பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொண்ட வரலாற்றில் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இணை அனுசரனையிலிருந்து விலகியதற்கான காரணம் இதுவாகும். நாம் இப்பிரச்சினையின் ஆரம்பத்திற்கு செல்ல வேண்டும். உமா மகேஷ்வரன் தமது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்தது பொருளாதார பின்னடைவை பற்றி கூறிய வண்ணமே. பின்னர் அவ் உண்மை நிலைமையை மறைத்து பிரிவினை வாதத்தை முன்னெடுத்தார். நாம் உண்மையான பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

காணாமல் போனோரின் பிரச்சினைக்கு வழங்கும் தீர்வு என்ன என்று மேலும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

காணாமல் போனோர் இருதரப்பிலும் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , ஒரிரண்டு நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு அரசியல் நோக்கத்துடன், அதனை பரந்த நிகழ்வுகளாக காட்ட முற்படுகின்றனர். காணாமல் போனோரை அடையாளம் கண்ட பின்னர் அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க முடியுமென அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் பற்றி யுனிசெப் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் அந்நிறுவனம் காணாமல் போனோர் என குறிப்பிட்ட பாரிய தொகையினர் எல்ரிரிஈ. மூலம் யுத்தத்தில் இணைக்கப்பட்டதன் பின்னர் போரில் இறந்துள்ளதாக தெளிவாகியது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் உங்களது தரப்பினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமித்துள்ளது. அதன் இரண்டு இடைக்கால அறிக்கைகள் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இறுதி அறிக்கை கிடைத்தவுடன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையிலும் முக்கிய பல முன்மொழிவுகள் உள்ளடங்கி உள்ளன. அவை அனைத்தையும் கருத்திற்கொள்வதாக குறிபிட்ட ஜனாதிபதி, தற்போது இடம்பெறுகின்ற விசாரணை தொடர்பாக கார்தினல் ஆண்டகை அவர்களும் திருப்தியடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வெட் உட்பட சில வரிகளை குறைத்ததன் மூலம் எதிர்பார்த்த பிரதிபலன் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, வீழ்ச்சி கண்டிருந்த பல தொழில் முயற்சிகள் வரி விலக்கின் மூலம் பாதுகாக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

அரச கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தெரிவுக்குழுவொன்றின் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அறிமுகப்படுத்திய முறைமை சிறப்பானதென கூறிய ஊடகவியலாளர் ஒருவர், இதுவரை வழங்கிய நியமனங்கள் தொடர்பாக திருப்திகொள்ள முடியுமா என கேள்வி எழுப்பினார்.

பல நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு வழங்கிய நியமனங்கள் தொடர்பாக திருப்திகொள்ள முடியுமென கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சில நியமனங்கள் தொடர்பாக பிரச்சினை இருப்பதாகவும் குறிப்பிட்டார். உயர் பதவிகளுக்கு நியமனம் பெற்றவர்கள் குறித்த காலத்திற்குள் சிறந்த பெறுபேறுகளை காட்ட வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவர்கள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி ஏற்படுமெனவும் குறிப்பிட்டார்.

ஒழுக்கமற்ற செயற்பாடுகளைக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளுடன் நீங்கள் எதிர்பார்த்த பயணத்தை பயணிக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

“மக்கள் பிரதிநிதிகளை ஜனாதிபதி தெரிவு செய்வதில்லை. அதன் பொறுப்பு முழுமையாக மக்களிடமே உள்ளது. அவர்கள் மிகத் தகுதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.” என்று பதிலளித்தார்.

அரச நிறுவனங்களின் பிரதானிகளாக முன்னாள் இராணுவ வீரர்களை நியமித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

கடந்த அரசாங்கம் பல்கலைக்கழ பிரதானியாக இராணுவ வீரர் ஒருவரை நியமித்திருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அன்று மௌனம்காத்த எதிர்க்கட்சி இப்போது குழப்பமடைந்துள்ளதெனக் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் நியமித்ததை விடவும் அதிகமாக இராணுவ வீரர்களை பல்வேறு பதவிகளுக்கு நியமித்திருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, உயர் தரம் கொண்ட இராணுவ வீரர்கள் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை பெற்றவர்களென அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாய துறை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இடைத் தரகர்களின் சுரண்டல் இன்றி விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயத்தை நிலைநாட்டுவதே தனது நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment