கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளையுடன் (9) நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும். தேசிய பரீட்சைக்காக விண்ணப்பங்கள் இணையத்தளத்தினூடாக பொறுப்பேற்கப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். இது வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் இது தொடர்பில் காட்டிவரும் ஆர்வம் உயர்மட்டத்தில் காணப்படுகிறது. இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் போது ஏற்படக்கூடிய பெரும்பாலான தவறுகளை திருத்திக் கொள்ள முடியும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்களின் தகவல்களை சரியான முறையில் பெற்றுக்கொள்வதற்கு இதன் மூலம் முடிகிறது. மாணவர்களை அடையாளம் காண்பதற்காக இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. மாணவர்களின் அனைத்து தகவல்களும் கணனிமயப்படுத்தப்படுவதனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த இலக்கத்தின் மூலம் எத்தகைய சந்தர்ப்பத்திலும் மாணவர்களின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இதனால் நேர்முகப் பரீட்சைகளின் போது பரீட்சை சான்றிதழ்களை எடுத்து செல்ல வேண்டிய தேவை ஏற்படாது.
இம்முறை கல்விப் பொது தராதர உயர் தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சை நடைபெறவுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தள்ளார்.